தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைக்க சபதம் ஏற்போம்: தங்கபாலு!
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (11:25 IST)
சென்னை: தமிழத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைத்து ராஜீவ்காந்தியின் எண்ணத்தை நிறைவேற்ற காங்கிரஸ் தொண்டர்கள் சபதம் ஏற்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு கேட்டுக்கொண்டுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 65-வது பிறந்தநாள் விழா தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசுகையில் "காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இல்லாத கட்சி என்று அனைவரும் சொல்லி வருகிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் பலம் உள்ளது என்பதை அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சிக்கு இணையான கட்சி, இந்தியாவில் இல்லை" என்றார்
"ராஜீவ்காந்தி வழியில் தற்போது பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசும் மக்களுக்காக பாடுபட்டு வருகிறது. விரைவில் சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் 33 விழுக்காடு மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற காங்கிரஸ் கட்சி பாடுபடும்.
தமிழகத்தில் உள்ள 73 விழுக்காடு இளைஞர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இளைஞர்களை முன்னிறுத்தி அவர்களுக்கு அங்கீகாரம் தர வேண்டும். தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ராஜீவ்காந்தியின் விருப்பத்தை நாம் நிறைவேற்ற வேண்டும்.
அதற்கு ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைக்க சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கே.வி. தங்கபாலு பேசினார்.