விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட, ரசாயனக்கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்தி தண்ணீரில் கரைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கலாம். இத்தகைய சிலைகளை தண்ணீரில் கரைக்கும் போது எவ்வித கெடுதலும் ஏற்படுவதில்லை.
ரசாயன வர்ணம் (பெயிண்ட்) பூசப்பட்ட, பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மூலம் செய்யப்படும் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது தவிர்க்கப்பட வேண்டும். அவ்வாறு கரைப்பதால் தண்ணீர் மாசு ஏற்படுகிறது.
கடலோரத்தில், ஏரிகளில் விநாயகர் சிலைகளை கரைக்காமல், கடலினுள் குறைந்தது 500 மீட்டர் தூரம் எடுத்துச் சென்று அரசினால் அறிவிக்கப்படும் இடங்களில் கரைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று கூறியுள்ளார்.