திண்டிவனம் அருகே சாலை மறியல் செய்த கிராம மக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
திண்டிவனத்தை அடுத்த ரெட்டணை கிராமத்தில் தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றன. இப்பணிக்கு தினக்கூலியாக ரூ.80 வழங்குவதற்கு பதில், குறைந்த கூலி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து திண்டிவனம்- ரெட்டணைச் சாலையில் அமர்ந்து கிராம மக்கள் மறியல் செய்தனர். இதையறிந்து திண்டிவனம் வட்டாட்சியர் கல்யாணம், மயிலம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் இளங்கோ உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து, கிராம மக்களுடன் பேச்சு நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து போராட்டம் தொடர்ந்தது. அப்போது மறியலில் ஈடுபட்ட முன்னாள் ஊராட்சி தலைவர் ராமலிங்கத்தை காவல்துறையினர் அச்சுறுத்தியதாகவும், இதைத் தட்டிக் கேட்ட ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வனை காவல்துறையினர் தாக்கியதாகவும் தெரிகிறது.
இதையடுத்து காவல்துறையினரையும், அவர்கள் வந்த வாகனங்களையும் பொதுமக்கள் தாக்கினர். நிலைமை மோசமடைந்ததை அடுத்து கூட்டத்தை கலைப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தினர். இதற்கும் பலன் ஏற்படாததை அடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இதில் 16 வயது சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது. காவல்துறையினரின் தடியடியில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ரெட்டணை கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.