தொழிலாளர் பிரச்னைகளை தீர்க்க கோரி சென்னையில், ஏஐடியுசி சார்பில் கோரிக்கை பேரணியில் கலந்து கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் பேசுகையில், தொழிற்சாலை ஆய்வாளர்களும் தொழிலாளர் ஆய்வாளர்களும் சட்டப் படியான கடமைகளை கூட செய்ய மறுக்கின்றனர்.
புதிய தொழிற்சாலைகளில் தொழிற்சங்கம் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதிய ஆணைகள் உள்ளிட்ட அரசு உத்தரவுகளில் மேல்நீதிமன்றத்தில் முதலாளிகள் தடை உத்தரவு பெறுகின்றனர். அவற்றை விலக்குவதற்கு அரசு வக்கீல்கள் முயற்சி எடுப்பதில்லை.
மூடிய ஆலைகளை திறக்க ஆட்சித்தலைவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள் செயல் படவில்லை. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து வரும் 20ஆ ம் தேதி நடைபெறும் வேலை நிறுத்த போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்று தா.பாண்டியன் பேசினார்.
முன்னதாக தா.பாண்டியனிடம், ‘திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டுகள் நீடிக்க வேண்டும் என்று கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளா ரே?’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதலமைச்சர் கருணாநிதியின் வேண்டுகோளை மிக மரியாதையுடன் பரிசீலனை செய்வோம். அவரின் வேண்டுகோளை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால் அதற்கென்று எங்களுக்கு யாரும் காலக்கெடு விதிக்க முடியாது. நாங்கள் கூடி விரைவில் முடிவு செய்வோம். அதற்கு இன்னும் காலம் இருக்கிறது'' என்றார்.