சேது சமுத்திர திட்டம் நிறைவேற அவமானங்களை தாங்‌கி‌க் கொ‌ள்வே‌ன்: கருணா‌நி‌தி!

சனி, 9 ஆகஸ்ட் 2008 (09:20 IST)
''சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்காக எத்தனை அவமானங்கள் ஏற்பட்டாலும் தாங்கிக் கொள்வேன்'' என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

செ‌ன்னை‌யி‌ல் நே‌ற்று நட‌ந்த சிறு பட்ஜெட் படங்களுக்கு அரசு மானியமும், சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகளும் வழங்கும் விழா‌வி‌ல் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி பேசுகை‌யி‌ல், இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் சின்னத்திரை கலைஞர்களுக்கு அரசு விருது வழ¢கப்படுகிறது.

இந்த விருதுடன் வழங்கப்படும் பரிசு தொகையும் சிறு படங்களுக்கு அ‌ளி‌க்கப்படும் மானிய தொகையும் போதுமானது எனக் கூறமாட்டேன். ஆனால், மனம் ஆறுதல் அடையும் வகையில் தொகையை வழங்கி உள்ளோம். இந்த விருதுக்காக விண்ணப்பித்து, விருதுக்கும் தேர்வானவர்களில் சிலர் அதை பெறவில்லை என்றால் அந்த தொகை அடுத்த ஆண்டு வேறு படத்துக்காக பயன்படுத்தப்படும்.

விருதுக்கு தேர்வாகி அதை வேண்டாம் என மறுத்தவர்கள் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. காரணம் அது அவர்களின் உரிமை.
ஒரு தமிழன் இன்னொரு தமிழனை தூற்றுகிறான், கிண்டல் செய்கிறான், அவமானப்படுத்துகிறான் எனும்போது அந்த அவமானத்தால் நாளை தமிழன் தலைநிமிர்வான் என்றால் ஆயிரம் அவமானங்களை தாங்கிக்கொள்வேன்.

உச்சநீதிமன்றம் வரையிலே சென்று நியாயம் கேட்கிறோம் என்றால் எதற்காக கேட்கிறோம்? எதற்காக வாதாடுகிறோம்? பெரியாரும், அண்ணாவும், காமராஜரும் எந்த சேதுசமுத்திர திட்டத்திற்காக குரல் கொடுத்தார்களோ, அந்த திட்டம் நிறைவேற வேண்டும், அதை இடையிலே வந்தவர்கள் கெடுக்க நினைக்கிறார்கள். ஏதேதோ காரணங்களைக்கூறி அந்த திட்டமே நிறைவேறக்கூடாது என்று கருதுகிறார்கள். அது நிறைவேறாவிட்டால் அது இலங்கைக்கு லாபம். தமிழகத்திற்கு நஷ்டம்.

தமிழகத்தின் வளம், வாணிபம், வர்த்தகம், எதிர்காலம் இவைகள் எல்லாம் பாதிக்கப்படும். ஒருதிட்டம் நிறைவேற வேண்டும், அந்த திட்டம் சேதுக் கால்வாய் திட்டம், அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று அண்ணா போராடினார். பெரியார் போராடினார். காமராஜர் நேருவிடம் சென்று வாதிட்டார்.

அத்தகைய ஒரு திட்டத்தை இன்றைக்கு மடக்கிப் போடச் செய்யப்படுகின்ற சூழ்ச்சியை எவ்வளவு நாட்களுக்கு தாக்குப்பிடித்து நாம் தாங்கிக் கொண்டிருக்க முடியும் என்ற காரணத்தினாலே தான், அந்த போராட்டத்தில் எவ்வளவு அவமானங்கள் வந்தாலும் பரவாயில்லை.

அதனைத் தாங்கிக் கொண்டு தமிழகத்தை தாங்குவதற்கு நம்முடைய எதிர்காலத்தை வளமாக்குவதற்கு நம்முடைய தமிழ்இனத்தின் குழந்தை குட்டிகள், எதிர்காலச் சமுதாயம் நலிவடையாமல் இருப்பதற்கு நலிந்து போகாமல் காப்பாற்றப்படுவதற்கு நாம் நம்மை தியாகம் செய்வதென்றால் தியாகம் என்பது உயிரைக் கொடுப்பது மாத்திரமல்ல, தியாகம் என்பது, அவமானப்படுவது கூட தியாகம் தான் எ‌ன்று முத‌‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்