முதல்வர் மவுனம் ஏன்? சரத்குமார் கேள்வி

சனி, 9 ஆகஸ்ட் 2008 (09:20 IST)
மக்கள் பிரச்னைக்காக எழுப்பப்படும் கேள்விகளுக்கு, பதில் அளிக்காமல் முதல்வர் மவுனமாக இருப்பது ஏன்?’’ என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''சிமெ‌ண்ட், கம்பி, மணல், ஜல்லி விலை உயர்ந்து கொண்டே போகிறது. சிமெ‌ண்ட் மூட்டை ரூ.300ஆக உயரும் என்ற செய்தி கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 'சிமெ‌ண்ட் விலையை குறைக்காவிட்டால், சிமெ‌ண்ட் ஆலையை அரசே ஏற்று நடத்தும்' என்று ஒரு அறிக்கை உணர்ச்சிகரமாக ஆட்சியாளர்களால் வெளியிடப்பட்டது.

உடனே ஆலை அதிபர்கள், முதல்வரை சந்தித்து விலையை குறைக்கிறோம் என்று அறிக்கை கொடுத்தனர். முதல்வருடன் படமும் எடுத்துக் கொண்டனர். ஆனால், அரங்கேறியது விலை குறைப்பு நாடகம் என்பதை போகப் போக மக்கள் தெரிந்து கொண்டனர். ஆலை அதிபர்கள் முதல்வரை சந்தித்தபோது, ஒரு மூட்டை சிமெ‌ண்ட் ரூ.245க்கு விற்றது. இப்போது ரூ.280 ஆக உயர்ந்திருக்கிறது.

பர்மிட் முறையிலும், பின்னர் தாரளமாகவும் குறைந்த விலையில் இறக்குமதி சிமெ‌ண்ட் வழங்குகிறோம் என்ற அரசின் அறிவிப்பு வீணாகிவிட்டது. கடந்த ஆண்டு டன் ரூ.36,000 இருந்த கம்பி விலை இன்று ரூ.50,000 ஆக விற்கிறது. ஜல்லி, மணல் என அனைத்து கட்டுமான பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே போகிறது.

மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு முதல்வர் விளக்கம் தரவேண்டும். வீடு கடனுக்கு வங்கிகள் வழங்கிய கடனுதவிக்கு வட்டி விகிதம் உயர்த்தி இருப்பதும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதும் ஏழை, எளிய மக்களின் வீடு கட்டும் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுமா? ஆசை கனவாகிவிடுமா? என்ற கேள்விக்கு பதில் வேண்டும்.

மக்கள் பிரச்னையை சார்ந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு விளக்கங்களோ பதில்களோ அளிக்காமல், முதல்வர் மவுனம் சாதிப்பது, பிரச்னைகளில் உழன்று கொண்டிருக்கும் மக்களை அவமதிக்கும் செயலாகும்'' எ‌ன்று சர‌த்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்