சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பொன்விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழக தகவல் தொழில்நுட்ப கொள்கையில், தெற்கு ஆசியாவில் தமிழகம் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் கேந்திரமாக திகழவேண்டும் என்றும் அதன்மூலம் தொழில்நுட்ப நிறுவனங்கள் 25 விழுக்காடு உற்பத்தி பங்கை பெற வேண்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்பத்துறையில் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வழி செய்யப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி, மேம்பாட்டு நடவடிக்கை திறன்களை வளர்ப்பதற்காக தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறை மேம்பாட்டுக்காக கட்டமைப்பு வசதிகள், மின் ஆளுமை உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில், இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.), அண்ணா பல்கலைக்கழகம் போன்ற பல பல்கலைக்கழகங்கள் திறமை வாய்ந்தவர்களை பெருமளவில் உருவாக்கும் கருவிகளாக விளங்குகின்றன. தமிழகத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில், கோவையில் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐ.ஐ.எம்.), திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றை மத்திய அரசு தொடங்க உள்ளது.
கல்வியில் சிறந்த ஏழை மாணவர்களுக்காக விழுப்புரம், திண்டிவனம், பண்ருட்டி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், அரியலூர் ஆகிய 6 இடங்களில் பொறியியல் கல்லூரிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. ஒரு லட்சம் மக்களுக்கு 163 பொறியியல் இடங்களை வழங்குவதன் மூலம் தொழில்நுட்ப கல்வியை வழங்குவதில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது.
சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் ஆராய்ச்சி பூங்கா அமைக்க இந்திய தொழில்நுட்பக் கழகம் அருகே தமிழக அரசு 11 ஏக்கர் நிலத்தை வழங்கி உள்ளது" என்றார்.