திருமணமாகாத பெண்களுக்கு மாதம் ரூ.400 திட்டம்: கருணாநிதி துவக்கம்!
வியாழன், 31 ஜூலை 2008 (17:48 IST)
திருமணமாகாமல் 50 வயது அடைந்த நிலையில், வறுமைச் சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழை எளிய பெண்களுக்கு மாதம் ரூ.400 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதியோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு உதவித் தொகைகள் வழங்கப்படுவதைப்போல, குடும்பத்தில் வசதிவாய்ப்புகளின்றித் திருமணம் ஆகாமலேயே தனித்து வாழ்ந்து 50 வயது அடைந்த நிலையில், உழைத்து சம்பாதித்து வாழ்க்கை நடத்த இயலாத வறுமைச் சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழை எளிய பெண்களுக்கு மாதம் ரூ.400 வீதம் உதவித் தொகை வழங்கப்படும் என சென்னையில் கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்களின் மாநாட்டில் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பினையொட்டி ஜூலை 1 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் குடும்பத்தில் வசதி அற்ற நிலையில் திருமணமாகாமலேயே 50 வயதடைந்து, உழைத்து வாழ்க்கை நடத்த இயலாத ஏழை பெண்களின் விவரங்கள் மாவட்ட ஆட்சியர்களால் தொகுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி உதவித்தொகை பெறுவதற்குத் தகுதி வாய்ந்தவர்களாக இதுவரை 9,100 ஏழை பெண்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.400 வீதம் உதவித் தொகை வழங்கப்படுவதன் அடையாளமாக 15 ஏழை பெண்களுக்கு தமிழக அரசின் இந்தப் புதிய திட்டத்தின்கீழ் மாதம் ரூ.400 வீதம் உதவித்தொகைகளை அளிப்பதற்கான ஆணைகளையும், 2008 ஜுலை மாத உதவித் தொகைக்குரிய காசோலைகளையும் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் கருணாநிதி இன்று வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்" என்று கூறப்பட்டுள்ளது.