தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க. வுடன் கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கூட்டணி தொடர்பாக தேசிய அளவில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு ஏராளமான நட்பு கட்சிகள் உள்ளன. இவற்றில் சில கட்சிகள் தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெறும். சில கட்சிகள் தேர்தலுக்குப் பின் கூட்டணியில் இணையும்.
தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்படுமா என்று கேட்டதற்கு, அதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. தேசிய அளவில் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். இன்னும் ஓரிரு மாதங்களில் அதன் முடிவுகள் தெரிய வரும்.
தலித் பெண் ஒருவர் பிரதமராக வருவதை பா.ஜ.க. தடுத்து விட்டதாக மாயாவதி கூறிய புகார் குறித்து கேட்டபோது, அந்த புகார் அடிப்படை ஆதாரமற்றது என்றார்.
கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ராமர் பாலத்தை உடைப்பதற்கு மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. என்ன விலை கொடுத்தாலும் ராமர் பாலத்தை காப்போம். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சேதுசமுத்திர திட்டத்தை மீண்டும் மறு ஆய்வு செய்வோம். ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்போம் என்று கூறினார்.