கச்சத்தீவு ஒப்பந்தம் முறையானது தானா என்பது குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தை பிரதமர் மன்மோகன் சிங் அணுக வேண்டும் என்றும், இல்லையென்றால் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன்'' என்றும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 1974ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு கச்சத் தீவை சிறிலங்காவிடம் ஒப்படைத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடப் போகிறேன். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க இந்த குறைந்தபட்ச நடவடிக்கையாவது எடுக்கப்பட்டே ஆக வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
போருபானி யூனியனையும் அதைச் சுற்றிய பகுதிகளையும் பாகிஸ்தானுக்கு வழங்குவது தொடர்பாக இந்தியாவும் அந்த நாடும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் மற்ற நாட்டிடம் வழங்க அரசியல் சட்டத்தின் 368வது பிரிவின் கீழ் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால், கச்சதீவு விடயத்தில் அப்படி எந்த ஒப்புதலையும் இந்திரா காந்தி பெறவில்லை. அடுத்து வந்த அரசுகளும் பெறவில்லை. இதனால் கச்சத்தீவு ஒப்பந்தம் முறையானது தானா என்பது குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தை பிரதமர் மன்மோகன் சிங் அணுக வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதை பிரதமர் மன்மோகன் சிங் செய்யத் தவறினால் நீதிமன்றத்தை நாடுவேன். உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகக் கோரியோ அல்லது ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரியோ வழக்குத் தொடருவேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.