சென்னை விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு அனுமதி!
செவ்வாய், 29 ஜூலை 2008 (18:37 IST)
சென்னை விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு பொது முதலீட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்கு பிறகு விரிவாக்க பணிகள் செப்டம்பருக்குள் தொடங்கும் என தெரிகிறது.
இந்திய விமான நிலைய கட்டுப்பாட்டு ஆணையம் மூலமாக சென்னை விமான நிலையத்தை உலகத் தரத்துக்கு உயர்த்த மத்திய அரசு கடந்த ஆண்டு ஏப்ரலில் முடிவு செய்தது. உலகின் பல்வேறு நிறுவனங்கள் வழங்கிய கட்டுமான திட்ட மாதிரிகளில் இருந்து இதற்கான திட்டத்தை ஆணையம் உருவாக்கியது. திட்டப் பணிகளை அமைச்சர்கள் குழுவும் ஏற்றுக் கொண்டது.
விமான நிலைய கட்டுப்பாட்டு ஆணையத்திடம் 130 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியது. பாதுகாப்புத் துறையும் உரிய நிலத்தை வழங்கியது. பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தை விமான விலைய விரிவாக்கத்துக்காக வழங்க கடந்த 24ஆம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. திட்டம் குறித்த சுற்றுச் சூழல் அனுமதியும் விரைவில் கிடைத்துவிடும் எனத் தெரிகிறது.
தற்போது ஆண்டுக்கு 30 லட்சம் பயணிகள் வந்து செல்லும் அளவுக்கு சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையம் உள்ளது. விரிவாக்க திட்டத்தின் மூலம் இந்த எண்ணிக்கை 70 லட்சமாக உயர்த்தப்படுகிறது. உள்நாட்டு முனையம் 60 லட்சம் பயணிகள் வந்து செல்லும் அளவுக்கு உள்ளது. ஒரு கோடி பேர் வந்து செல்லும் வகையில் கூடுதலாக இன்னொரு உள்நாட்டு முனையம் அமைக்கப்படுகிறது. புதிய உள்நாட்டு முனையம் அமைக்க ரூ.1, 077 கோடி செலவாகும். இந்த விரிவாக்கத் திட்டத்துக்கு மொத்தம் ரூ.1,808 கோடி செலவிடப்படும்.
பரிசோதனை, கட்டுமானம் உள்ளிட்டவற்றுக்கான முன்னேற்பாட்டு பணிகள் முடிவடைந்துள்ளன. விமான நிலைய விரிவாக்க வேலைகள் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு பணிகளும் 2010-ம் ஆணடு ஏப்ரலுக்குள் நிறைவடையும் எனத் தெரிகிறது.