நாளை முதல் உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் தனியார் வாகனங்கள் செல்ல தடை!
செவ்வாய், 29 ஜூலை 2008 (11:32 IST)
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் தனியார் வாகனங்கள் செல்ல நாளை முதல் தடை விதிக்கப்படுகிறது. ஆனால் வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அலுவலக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், நாளை முதல் தனியார் வாகனங்கள் நுழைய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் வழக்கறிஞர்கள் பணிகளை முடித்துவிட்டு இரவு 8 மணிக்கு மேல் இருக்க கூடாது என்றும், இரவு 8.30 மணிக்கு மேல் உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் எந்த வாகனங்களும் இருக்கக் கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது. இது நாளை (30ஆம் தேதி) முதல் அமலுக்கு கொண்டு வரப்படுகிறது.
தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் நீதிபதிகள் டி.முருகேசன், கே.ரவிராஜபாண்டியன், சி.நாகப்பன் மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், செயலாளர் எம்.வேல்முருகன், பார் அசோசியேஷன் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கே.சாந்தகுமாரி, சட்ட அசோசியேஷன் தலைவர் கிருஷ்ணகுமார், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆர்.சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.