பெங்களூரு, அகமதாபாத்தில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவங்கள் மிகவும் கண்டனத்திற்குரிய என்று கூறியுள்ள இல.கணேசன், வெடிகுண்டு நிகழ்வுகள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நடைபெற்றுள்ளன என்றும் இது திட்டமிட்டு செய்த செயலாக தெரிகிறது என்றும் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வுகளின் பின்னணியில் தேசத்தின் பாதுகாப்பு அடங்கியுள்ளதை உணராமல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் என்று கூறியுள்ள இல.கணேசன், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நாடு அமைதியை இழக்கிறது என்றும் அம்மாநில பா.ஜ.க. ஆட்சி, மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை என்றும் தங்கபாலு கூறியிருப்பதிலிருந்து இந்த நிகழ்வுகளின் பின்னணியில் காங்கிரசின் பங்கு இருக்குமோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்த வெடிகுண்டு நிகழ்வால் காங்கிரஸ் மகிழ்ச்சியடைகிறது என்பதும் தங்கபாலு அறிக்கையிலிருந்து வெளிப்படுகிறது என்று குற்றம்சாற்றியுள்ள இல.கணேசன், இது பண்பாடற்ற, பக்குவமற்ற, மோசமான ரசனையுள்ள போக்காகும் என்று குறிப்பிட்டுள்ளார்.