''பல்வேறு வரிகளை உயர்த்தியுள்ள உதக மண்டலம் நகராட்சி நிர்வாகத்தைத் தண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
உதகமண்டலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல், பல்வேறு வரிகளை உயர்த்தியுள்ள நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
குடிநீர் விநியோகம் சீராக நடைபெற ஏதுவாக கூடுதல் ஜெனரேட்டர் பொருத்துவது உட்பட மக்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி உதகமண்டலம் நகராட்சி அலுவலகம் முன்பு நாளை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினரும், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையிலும், நீலகிரி மாவட்ட செயலாளர் செல்வராஜ், உதகமண்டலம் நகரச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.