திம்பம் சாலையில் தொடரும் போக்குவரத்து தடை!

திங்கள், 28 ஜூலை 2008 (11:47 IST)
webdunia photoWD
திம்பம் மலைப்பாதையில் அதிக டன் பாரம் ஏற்றிவரும் வாகனங்களால் பலமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை அவசியமாக உள்ளது.

சத்தியமங்கலம் அடுத்து பண்ணாரியில் இருந்து தொடங்குகிறது திம்பம் மலைப்பாதை. மொத்தம் பத்து கி.மீ. தூரத்தில் இருபத்தி ஏழு கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இதில் ஆறு, எட்டு, ஒன்பது, இருபது, இருபத்தி ஏழு உள்ளிட்டவை மிகவும் குறுகிய ஆபத்தான வளைவுகள். இந்த வளைவுகளில் அதிக பாரம் ஏற்றிவரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகியும், பழுதடைந்தும் பலமணிநேரம் போக்குவரத்து தடை ஏற்படுவது தற்போது சாதாரண நிகழ்வாகிவிட்டது.

இந்த மலைப்பாதையில் மொத்தம் 16.20 டன் எடைகொண்ட லாரி, பேரு‌ந்தமற்றும் இந்த எடைக்கு உள்ளிட்ட வாகனங்களே செல்லவேண்டும். பாரம் ஏற்றிவரும் லாரிகள் உயரம் 3.80 மீட்டர் அளவே இருக்க வேண்டும் என்பதுதான் இந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை அளித்துள்ள அனுமதியாகும்.

ஆனால் சாதாரணமாக இந்த வழியாக குறைந்தது 30 டன் முதல் 50 டன் வரை கருங்கல் பாறை, மரம் உள்ளிட்ட பாரங்கள் ஏற்றி லாரிகள் வந்து செல்கிறது. இந்த லாரிகள் மீது எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. தேசிய நெடுஞ்சாலை அனுமதிக்கப்பட்டுள்ள பார அளவுகள் சரியாக ஏற்றிவந்தால் இந்த ரோட்டில் விபத்து என்பது ஏதாவது ஒரு நேரம் ஏற்படும்.

அதிக பாரம் ஏற்றி வருவதால் ஏற்படும் விபத்தால் பத்து மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக பேரு‌ந்‌தில் இருக்கும் பயணிகள் குழந்தைகளுடன் தண்ணீரும் கூட இல்லாமல் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

ஆகவே திம்பம் மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து தடையை குறைக்க அதிகபாரம் ஏற்றிவரும் லாரிகளை ஆசனூர் மற்றும் பண்ணாரியில் தடுத்தி நிறுத்தினால் மட்டுமே இதற்கு தீர்வாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்