''பெங்களூரு தொடர் குண்டுவெடிப்புக்கு உளவுத் துறை சரியாக இயங்காததே காரணம்'' என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றம்சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பெங்களூருவில் ஒரு மணி நேரத்துக்குள், 7 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்துள்ளது திடுக்கிட வைக்கிறது.
இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், குறிப்பாக தமிழகத்தில் இருந்தும் சென்று பெங்களூருவில் வேலை செய்கிறவர்கள் அதிகம். அத்தகைய நாகரீகமான நகரத்தில் இத்தகைய வன்முறை நிகழ்வுகள் நடந்திருப்பதும் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதும் கண்டிக்கத்தக்கது.
இத்தகைய நிகழ்வுகள் நடந்துள்ளதற்கு உளவுத் துறை சரிவர இயங்காததே காரணம். மத்திய, மாநில அரசுகள் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் முனைந்து செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.