ஆடி கிருத்திகை: அரக்கோணம் - திருத்தணிக்கு சிறப்பு ரயில்!
சனி, 26 ஜூலை 2008 (10:04 IST)
ஆடிக்கிருத்தியையொட்டி நாளை முதல் அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு ரயில்கள் விடப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆடி கிருத்திகையையொட்டி அரக்கோணம் - திருத்தணி இடையே 27, 28, 29 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு காலை 10.30 மணி, மதியம் 12.15 மணி, மதியம் 2.50 மணியளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதேபோல், திருத்தணியில் இருந்து அரக்கோணத்திற்கு காலை 11 மணி, மதியம் 12.45 மணி மற்றும் 3.30 மணியளவில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து மதுரைக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி சிறப்பு ரயில் (வண்டி எண் 0609) இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் காலை 9.30 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், மதுரையில் இருந்து சென்னைக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி சிறப்பு ரயில் (0610) இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைகின்றது.
இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மதுரையில் இருந்து சென்னை வரும் ரயில் (0610) கூடுதலாக மாம்பலத்தில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை முதல் தொடங்குகிறது.
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு இன்று (26ஆம் தேதி), 28 மற்றும் ஆகஸ்ட் 4ஆம் தேதி சிறப்பு ரயில்கள் (வண்டி எண். 0607) இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில்கள் மறுநாள் மதியம் 12.45 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு நாளை (27ஆம் தேதி), 29 மற்றும் ஆகஸ்ட் 5ஆம் தேதி சிறப்பு ரயில்கள் (0608) இயக்கப்படுகின்றன. திருநெல்வேலியில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில்கள் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். திருநெல்வேலியில் இருந்து சென்னை வரும் ரயில்கள் (0608) கூடுதலாக மாம்பலத்தில் நின்று செல்லும்.
இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை முதல் தொடங்குவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.