எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரனை தகுதி இழப்பு செய்ய அவை‌த் தலைவ‌ரிட‌ம் மனு!

சனி, 26 ஜூலை 2008 (09:41 IST)
''எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரை தகுதி இழப்பு செய்ய வேண்டும்'' என்று ம.தி.மு.க. சார்பில் ம‌க்களவை‌த் தலைவ‌ர் சோ‌ம்நா‌த் சா‌ட்ட‌ர்‌ஜி‌யிட‌ம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''எல்.கணேசன், செஞ்சி என்.ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த ம‌க்களவை தேர்தலில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக அவர்களை முறையே அவைத்தலைவர் பொறுப்பில் இருந்தும், துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தும் ம.தி.மு.க. பொதுக்குழு கடந்த 10-1-2007 அன்று நீக்கியது.

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எதிர்த்து ம.தி.மு.க. ம‌க்களவை உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. முடிவு செய்தது. ம.தி.மு.க.வின் இந்த முடிவை தெரிவித்து `விப் ஆணை' வழங்கும்படி ம.தி.மு.க. ம‌க்களவை உறுப்பினர் சி.கிருஷ்ணனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

22-7-2008 அன்று ம‌க்களவை‌யி‌ல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எல்.கணேசன், செஞ்சி என்.ராமச்சந்திரன் ஆகியோர் கட்சியின் உத்தரவை மீறி பிரதமர் மன்மோகன்சிங் அரசிற்கு ஆதரவாக வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் ம.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 24-7-2008 அன்று நீக்கப்பட்டனர்.

எல்.கணேசன், செஞ்சி என்.ராமச்சந்திரன் ஆகியோர் கட்சி உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்தில் வாக்களித்திருப்பது இந்திய அரசியல் சட்டத்தில் 10-வது அட்டவணையின்படி தகுதி இழப்புக்கு உட்பட்டது என்றும், அவர்களை தகுதி இழப்பு செய்ய வேண்டும் என்றும் ம‌க்களவை தலைவ‌ர் சி.கிருஷ்ணன் தனித்தனியே ந‌ே‌ற்று மனுக்களை அளித்துள்ளார்'' எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்