தமிழக அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள மின்வெட்டு உள்பட பல்வேறு பிரச்சனைகளை கண்டித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று கட்சியின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு அறிவித்திருக்கும் மின்வெட்டால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து பட்டினியால் வாடும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மீனவர்களின் மீதான தொடர் தாக்குதல்களால் கடலோரப்பகுதிகளில் அழுகுரல்கள் கேட்கும் அளவுக்கு பரிதாபம் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேட்டூர் அணையில் குறைந்துவரும் நீராலும், உரத் தட்டுப்பாட்டாலும், விவசாயிகள் கடும் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர் என்று கூறியுள்ள அவர், தொடர்கொலை நிகழ்வுகளால் பீதியில் நிற்கும் மக்கள், இப்படி அனைத்து துறைகளிலும் செயலிழந்து நிற்கும் தமிழக அரசை கண்டிப்பதோடு, ஆகஸ்ட் 1ஆம் தேதி சென்னை மெமோரியல் அரங்கம் அருகில் காலை 10 மணிக்கு கட்சித் தலைவர் சரத்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று கரு.நாகராஜன் கூறியுள்ளார்.