இலவச மிதிவண்டி திட்டம்: கருணாநிதி துவக்கி வைத்தார்!
வெள்ளி, 25 ஜூலை 2008 (15:07 IST)
பிளஸ் 1 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இந்த ஆண்டுக்கான இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார். மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்குப் பரிசுத் தொகைகள் முதல்வர் வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் கருணாநிதி, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் இவ்வாண்டில் 11ஆம் வகுப்பில் படிக்கும் 5,22,650 மாணவ- மாணவிகள் அனைவருக்கும் இலவச மிதிவண்டிகள் வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாகப் படித்து 2008ல் நடைபெற்ற 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த 10மாணவ- மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வழங்கினார்.
இதேபோல் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்ற ஆதிதிராவிடர் மாணவ- மாணவிகள் 6 பேருக்கு தலா ரூ.25,000 வழங்கினார்.
இதேபோல, 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், சிறுபான்மையினர் ஆகிய மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்ற 43 மாணவ- மாணவிகளுக்கும், 12ஆம் வகுப்பில் மாநில அளவில் முதல் மூன்று இடங்கள் பெற்ற 25மாணவ- மாணவிகளுக்கு ரூ.3 லட்சத்து 43 ஆயிரம் பரிசுத் தொகையை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுச் சிறந்த பள்ளிகள் என விரும்பிச் சேர்ந்து பயிலும் 1200 மாணவ- மாணவிகளுக்கு 3 கோடியே 36 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதல்வர் வழங்கினார்.