தொ.மு.ச. பற்றி பேச ராமதாசுக்கு அருகதை இல்லை: குப்புசாமி!
புதன், 23 ஜூலை 2008 (10:11 IST)
''நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் உழைத்து சாதனை படைக்கும் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இயங்கும் தொ.மு.ச. பேரவை பற்றி பேச ராமதாசுக்கு அருகதை இல்லை'' என்று தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை தலைவரும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமான செ.குப்புசாமி கண்டனம் தெரிவித்தள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் சங்க நிகழ்ச்சியில், 'தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்றாத கட்சிகள் தொழிற்சங்கம் வைக்க தேவையில்லை' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார்.
தொ.மு.ச. பேரவையை பற்றி ராமதாஸ் அவதூறுகளை அள்ளி தெளித்துள்ள அறியாமையை பார்த்து அழுவதா, சிரிப்பதா என்பது புரியவில்லை.
நுகர்பொருள் வாணிபக்கழகத்தை தொடங்கியது, நெல் கொள்முதல் ஊழியர்களுக்கு பி.எப். பிடிக்க செய்தது, நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் பற்றி அறிவித்தது என முதலமைச்சர் கருணாநிதி செய்தது நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்களுக்கும் நன்கு தெரியும்.
அயராத உழைப்பாளியின் மகனாக பிறந்து, நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் உழைத்து சாதனை படைக்கும் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இயங்கும் தொ.மு.ச. பேரவை பற்றி பேச ராமதாசுக்கு அருகதை இல்லை'' என்று குப்புசாமி கூறியுள்ளார்.