சிறிலங்காவுக்கு தமிழக மீனவர் குழுவை அனுப்ப வலியுறுத்தல்!
புதன், 23 ஜூலை 2008 (09:40 IST)
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்த சிறிலங்காவுக்கு மீனவர் பிரதிநிதிகள் குழுவை அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு பாண்டிச்சேரி மாநில மீனவர் கூட்டமைப்பின் ஆலோசகர் தேவதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''கொழும்பில் கடந்த 20ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டில் தெற்காசிய நாடுகளின் பல்வேறு மக்கள் இயக்கங்கள் பங்கேற்றன. இதில் கூட்டமைப்பு சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில் தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு நிகழ்வுகள் குறித்து சிறிலங்கா வானொலியின் தேசிய சேவையில் எடுத்துக் கூறப்பட்டது. கடந்த 1983-க்குப் பின் 200-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிக் குண்டுகளை உடலில் இருந்து அகற்றப்படாத நிலையில் நடமாடுகின்றனர்.
ஏற்கனவே சிறிலங்கா தூதரை அழைத்து மத்திய அரசு கண்டித்துள்ளது. தமிழகத்திலும் மீனவர் மீதான தாக்குதலைக் கண்டித்து அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சாதகமான சூழலில் மீனவர் பிரதிநிதிகள் 10 பேர் கொண்ட குழு அல்லது உயர் நிலைக் குழுவை சிறிலங்காவுக்கு அனுப்பி தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று தேவதாஸ் கூறினார்.