தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவர் கருணாநிதி: ஆற்காடு வீராசாமி!
சனி, 19 ஜூலை 2008 (16:23 IST)
''மீனவர்கள் மட்டுமல்ல, உலகில் தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும், முதலில் துடித்தெழுந்து குரல் கொடுக்கும் தலைவர் கருணாநிதி'' என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் உண்ணாவிரத்திற்கு தலைமை தாங்கிய அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசுகையில், ''மீனவர்கள் பிரச்சனை மட்டுமின்றி, அனைத்து தரப்பு பிரச்சனைகளிலும் உலகத்தமிழர்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் துடித்தெழுந்து குரல் கொடுப்பவர் முதலமைச்சர் கருணாநிதி. இலங்கை தமிழர் பிரச்சனையில் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருவது கருணாநிதியும், அவரது தலைமையிலான திமுகவும்தான்.
கடந்த 1983ம் ஆண்டு இந்த பிரச்சனையில் கருப்புச்சட்டை அணிந்து பேரணி நடத்தியதையும், கருணாநிதி மற்றும் அன்பழகன் ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
சிறிலங்க கடற்படையினரால் மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சனைக்கு தீர்வுகாண தொடர்ந்து கருணாநிதி போராடி வருகிறார். மத்திய அரசை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறார். ஆனால் இன்று சில திடீர் அரசியல் தலைவர்கள் ராமேஸ்வரம் வரை சென்று கருணாநிதி மற்றும் திமுக அரசு பற்றி எந்த அளவுக்கு விமர்சித்து பேச முடியுமோ அந்த அளவுக்கு பேசி தங்களது விலாசத்தைக்காட்ட முயற்சி செய்து வருகிறார்கள்.
மீனவர்கள் மட்டுமல்ல, உலகில் தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும், முதலில் துடித்தெழுந்து குரல் கொடுக்கும் தலைவர் கருணாநிதி. சிறிலங்க கடற்படையினரால் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் பிரச்சனை மட்டுமல்ல, வேறு எந்த பிரச்சனையாக இருந்தாலும், முதலமைச்சர் கருணாநிதி கட்ட ளையை ஏற்று எந்த தியாகத்தையும் செய்ய தாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.