''கச்சத்தீவில் நமக்குள்ள உரிமைகளை பெற்றுத் தரத்தவறினால் கச்சத்தீவே மீண்டும் எங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் நிலை உருவாகும். இந்த பிரச்சனையில் கட்சி வேறுபாடுகளையும், அரசியல் மாறுபாடுகளையும் கடந்து நாம் அனைவரும் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டித்தும், இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நமது உரிமைகளை நிலைநாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று தி.மு.க. சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில், இந்தப் போராட்டம் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகவோ அல்லது பத்து இருபது ஆண்டுகளாகவோ நடைபெற வில்லை. 1956 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. நீண்ட நெடிய போராட்ட வரலாறு இது. அதில் ஒரு அத்தியாயத்தை நாம் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறோம்.
இதனை எழுதத் தொடங்கும் இந்த நேரத்தில் நம்முடைய தமிழக மீனவர்கள் சிறிலங்க அரசால் சிங்கள ராணுவத்தால் எந்தெந்த வகையில் எல்லாம் வேதனைகளுக்கும், சோதனைகளுக்கும் ஆளாகின்றார்கள் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
நாம் எந்த அளவிற்கு பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறோம் என்பதை ஆதாரப்பூர்வமாகவும், சான்றுகளோடும் பட்டியலிட்டு காட்ட வேண்டிய அவசியமில்லை. இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று திரும்பிவராமல் போவதற்கு சிங்கள ராணுவம் அவர்களை கொன்று குவிப்பதே காரணமாகும். இது தொடர்ந்து நடைபெறும் நிகழ்வாகி வருகிறது. இதனை தடுத்து நிறுத்த நாம் எடுத்த முயற்சிகள் ஒன்று, இரண்டு அல்ல.
மீனவர்களுக்கு இன்றைக்கு ஏற்படுகின்ற தீமைகளுக்கு கச்சத் தீவை திமுக விட்டுக்கொடுத்தது தான் காரணம் என்று சிலர் தற்போது பேசத் தொடங்கியிருக்கிறார்கள். 1974ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஒரு உடன்பாட்டின் மூலம் சிறிலங்காவுக்கு கச்சத்தீவை விட்டுக்கொடுக்கும் முடிவை எடுத்த போது அதனை நாம் ஏற்கவில்லை. கச்சத்தீவை விட்டுத்தர முடியாது என்று சட்டமன்றத்திலேயே தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறோம்.
தமிழக மக்களின் உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து கச்சத்தீவை சிறிலங்காவுக்கு விட்டுத் தரும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாம் அந்த தீர்மானத்திலே வலியுறுத்தி இருக்கிறோம்.
தமிழக மக்கள் மட்டுமன்றி பல்வேறு அரசியல் கட்சிகளும் கச்சத்தீவுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறார்கள். 1991ம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் கச்சத்தீவை மீட்டே தீருவோம் என்று அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் கூறியிருக்கிறார்.
தமிழகத்தின் வாழ்வாதாரமாக திகழும் இந்த கச்சத்தீவு பிரச்சனையில் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டவே இதனை இங்கு கூறுகிறேன். சிறிலங்க அரசுடன் கச்சத்தீவு உடன்பாடு ஏற்பட்டாலும், அதன் மீதான தமிழக மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டன. அங்கு நடைபெறும் தேவாலய திருவிழாவில் இந்திய மீனவர்கள் கலந்துகொள்ளும் உரிமை, கச்சத்தீவில் மீனவர்கள் வலை காயப்போடும் உரிமை போன்ற உரிமைகள் அந்த ஒப்பந்தத்தில் நிலைநாட்டப்பட்டன.
ஆனால் அதன் பிறகு 1976ம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தின்போது இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையே நடந்த கடிதப்போக்குவரத் திலேயே இந்த உரிமைகள் பறிபோய் விட்டன.
எனவே பறிபோன உரிமைகளை மீண்டும் பெற்றுத்தர வேண்டும் என்று நாம் மத்திய அரசை வலியுறுத்துகிறோம். அவ்வாறு கச்சத்தீவில் நமக்குள்ள உரிமைகளை பெற்றுத் தரத்தவறினால் கச்சத்தீவே மீண்டும் எங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் நிலை உருவாகும்.
இந்த பிரச்சனையில் கட்சி வேறுபாடுகளையும், அரசியல் மாறுபாடுகளையும் கடந்து நாம் அனைவரும் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும். அந்த வகையில் இன்று பட்டினிக்குரலாக நாம் நம்முடைய வேதனைகளையும், கண்டனத்தையும் தெரிவிக்கிறோம். இந்தக் குரலுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.