தமிழக மீனவர்களை சிறிலங்க கடற்படையினர் சுட்டு கொல்லப் படுவதை கண்டித்து தலைநகர் டெல்லியில் திமுக போராட்டம் நடத்தாது ஏன்? என்பது குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகே இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மாமல்லபுரத்தில் நடந்த வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு தி.மு.க முதன்மை செயலாளரும், பொதுப் பணித்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கி பேசுகையில், ''தமிழக மீனவர்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கிறது. இதில் சிறிலங்க கடற்படை தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவது ஒரு புறமும், சிறையில் அடைப்பது மறு புறமும் என தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மீனவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக கட்டுமரத்தில் மீன் பிடிக்க செல்கிறார்கள். அண்டை மாநிலத்தோடும், தேசத்தோடும் நட்புறவு வேண்டும். ஆனால் சிறிலங்காவில் அது போல் இல்லை. நம்நாடு ஜனநாயகமாக இருப்பதால் பொறுமையக பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
சிறிலங்க கடற்படை தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை டெல்லியில் நடத்தாமல் ஏன் தமிழகத்தில் நடத்துகிறீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள்.
பொதுவாக தொலைக்காட்சியை ரிமோட் மூலமும், அதில் உள்ள சுவிட்ச் மூலம் இயக்கலாம். சுவிட்ச் மூலம் இயக்க வேண்டுமென்றால் தொலைக்காட்சி அருகே செல்ல வேண்டும். ஆனால் ரிமோட் மூலம் இயக்கும்போது தூரத்தில் இருந்தே இயக்கலாம். அதே போல தான் தி.மு.க தலைவர் கருணாநிதியும் கோபாலபுரத்தில் இருந்துகொண்டே டெல்லியை இயக்கக் கூடியவர்.
தற்போது வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை தூதரகம் மூலம் இப்பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். தி.மு.க தலைவர் கருணாநிதி கன்னியாகுமரியில் உட்கார்ந்துக் கொண்டே மத்திய அரசு உறுதிமொழியை வாங்குவதில் வல்லமை படைத்தவர்'' என்று துரைமுருகன் கூறினார்.