மேட்டூர் அணை நீர்மட்டம் 67 அடியானது!
சனி, 19 ஜூலை 2008 (11:52 IST)
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 67 அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 68 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,509 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 12,990கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 1,592 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 12,981 கனஅடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மணப்பாறையில் அதிகபட்சமாக 101.4 மி.மீ மழை பெய்துள்ளது. திருச்சியில் 47.5 மி.மீ, திருச்சி விமான நிலையம் 32.6 மி.மீ, அப்பர் அணைக்கட்டு 28 மி.மீ, லால்குடி 26.3 மி.மீ, மேட்டூர் 23.5 மி.மீ, கல்லணை, குளித்தலை தலா 15 மி.மீ, பொன்னனியூர் அணை 10.8 மி.மீ மழை பெய்துள்ளது. திடீரென பெய்த மழையால் புதுக்கோட்டை மாவட்டம் பி.மாத்தூர் கிராமத்தில் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கருப்பு முற்றிலும் சேதம் அடைந்தது. 37 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 36 அடி குறைந்துள்ளது. இன்னும் 22 நாட்களுக்கு மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும்.
செயலியில் பார்க்க x