கடந்த 1998 ஆம் நடந்த கோவை குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், கேரள ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
மதானி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, குண்டுவெடிப்பில் பலியான ஒருவரின் தந்தையான மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வெள்ளிங்கிரி உள்பட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
மதானிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் தண்டனை வழங்க வேண்டும் என்றும் மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்றும் காலம் கடந்து அவர்கள் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர் என்றும் மதானி பதில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி கே. மோகன் ராம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் மூன்றாவது கட்சிக்காரர்கள் அல்ல, அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள். எனவே மதானி விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.