முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!
வியாழன், 17 ஜூலை 2008 (13:31 IST)
142 அடிக்கு மேல் தண்ணீரை தேக்கி வைக்கும் அளவுக்கு முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழகம் - கேரளா இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கை ஆகும்.
ஆனால் அணை பலவீனமாக இருப்பதாகவும், எனவே நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று கேரளா கூறி வந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்று அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் அந்த உத்தரவை அமல்படுத்த விடாமல் கேரளா முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
இதையடுத்து திடீரென தற்போதுள்ள முல்லைப்பெரியாறு அணைக்குப் பதிலாக அதன் கீழ்ப் பகுதியில் புதிய அணை கட்ட வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்தது.
அந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்ப பிரிவின் துணைத் தலைவர் ஆர்.சுப்பிரமணியம் நேற்று பதில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் இருப்பதாவது: கடந்த 2006, பிப்ரவரி 27ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, முல்லைப்பெரியாறு அணையை மேலும் பலப்படுத்த தமிழக அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதையடுத்து நிபுணர் கமிட்டியின் பரிந்துரைப்படி, அணையை பலப்படுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு முடித்தது. இதன்மூலம் அணையில் உண்மையான அதிகபட்ச கொள்ளளவான 142 அடிக்கும் கூடுதலாக தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
2006-ல் தமிழக அரசு நியமித்த நிபுணர் கமிட்டி, அணை மற்றும் அதன் அடித்தளத்தை முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. அதில் அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. அணைப் பகுதியில் காணப்படும் நீர்க்கசிவு, அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்தான் இருக்கிறது.
தற்போதுள்ள அணையை வலுப்படுத்த வேண்டும் என்று மத்திய நீர்வள துறை முடிவு எடுத்தது. அதன்பிறகே தற்போது இருக்கும் அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா தெரிவித்தது. எனவே இது காலம் கடந்த சிந்தனை ஆகும்.
மேலும் தற்போதுள்ள முல்லைப்பெரியாறு அணையின் கீழ் பகுதியில் மிகப்பெரிய பரப்பிலான வனப்பகுதியும், ஒரு வன விலங்கு புகலிடமும் உள்ளது. இந்த சூழ்நிலையில் அங்கு தற்போது இருக்கும் அணையின் கீழ் பகுதியில் புதிய அணை கட்டுவது இயலாத காரியம் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.