சிறிலங்கா அதிபருடன் பேசி மீனவர் பிரச்சனை பற்றி பேசுவேன்: அன்புமணியிடம் பிரதமர் உறுதி!
வியாழன், 17 ஜூலை 2008 (12:15 IST)
தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் குறித்து சிறிலங்கா அதிபருடன் பேசுவேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இதற்கான உறுதியை தம்மிடம் பிரதமர் அளித்ததாக சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதல், துப்பாக்கிச்சூடு பிரச்னை, காடுவெட்டி குரு கைதானபோது காவல்துறையினரின் அத்துமீறல், தமிழக அரசின் பழிவாங்கல் நடவடிக்கை ஆகியவை குறித்து பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோரை பா.ம.க. குழு நேற்று சந்தித்தது.
அமைச்சர் அன்புமணி தலைமையில் பா.ம.க. தலைவர் கோ.க.மணி, பா.ம.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவினர் சந்தித்து முறையிட்டனர்.
"அடுத்த மாதம் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள சிறிலங்கா செல்லும்போது, அந்த நாட்டு அதிபருடன் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்துப் பேசுவேன் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்'' என்று அன்புமணி கூறினார்.