ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தான் ஏற்கனவே 17 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டதால் தன்னை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் தன்னையும் எதிர் மனுதாரராக சேர்த்துக்கொள்ளக்கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் நளினியை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
அவரது மனுவுக்கு நளினி சார்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் என்னை விடுதலை செய்வதற்கு சுப்பிரமணிய சுவாமியின் கருத்தை கேட்க வேண்டியதில்லை. அவருடைய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அவரை எதிர் மனுதாரராக சேர்க்கக்கூடாது என்று நளினி பதில் அளித்திருந்தார்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினியை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று தமிழக அரசும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. மேலும் சுப்பிரமணியசுவாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் மனுதாக்கல் செய்யப்பட்டது.
நளினி தொடர்ந்த வழக்கில் சுப்பிரமணியசாமி தாக்கல் செய்த மனுவை சேர்ப்பது தேவையற்றது. அவரை இந்த வழக்கில் சேர்ப்பதால் அரசின் நிலைப்பாடு மாறப்போவதில்லை. மனுவில் சுப்பிரமணியசாமி கூறிய கருத்துக்களை கடுமையாக எதிர்க்கிறோம். இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் கிடையாது. மத்திய-மாநில அரசுகள், நளினிக்கு சாதகமாக முடிவெடுப்பார்கள் என்றும் முன்கூட்டியே விடுவிப்பார்கள் என்று கூறுவதும் தவறு என தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.