தி.மு.க. அரசை கண்டித்து 17ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா!
செவ்வாய், 15 ஜூலை 2008 (15:58 IST)
குறிச்சி, குனியமுத்தூர், கிணத்துக் கடவு கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதில் மெத்தனம் காட்டும் தி.மு.க அரசைக் கண்டித்து அ.இ.அ.தி.மு.க சார்பில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''எனது ஆட்சிக் காலத்தில், கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், குறிச்சி, குனியமுத்தூர் மற்றும் கிணத்துக்கடவு கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு அனுமதி வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்தக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கான தொழில்நுட்ப அனுமதியும் எனது ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது. ஆனால், பின்னர் பொறுப்பேற்ற தி.மு.க அரசின் மெத்தனப் போக்கினால் மேற்படிக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கான பணிகள் மந்த கதியிலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அரசின் மெத்தனப் போக்கினால், கடந்த 26 மாத கால தி.மு.க ஆட்சியில் 30 விழுக்காடு பணிகள் மட்டுமே தற்போது முடிவடைந்துள்ளன. இதே வேகத்தில் பணிகள் நடைபெற்றால், இந்தத் திட்டம் நிறைவேற இன்னும் ஐந்து ஆண்டுகள் இந்த அரசுக்குத் தேவைப்படும்.
கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படாததன் விளைவாக, அப்பகுதி மக்கள் மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே குடிநீர் பெறக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
எனவே, குறிச்சி, குனியமுத்தூர், கிணத்துக்கடவு கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளை தாமதப்படுத்தும் தி.மு.க அரசைக் கண்டித்து கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் வருகிற 17ஆம் காலை 10 மணிக்கு குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட சுந்தராபுரம் சங்க வீதி என்ற இடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.