சத்துணவுத் திட்டத்தில் முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாரத்திற்கு மூன்று நாள் வாழைப்பழம் வழங்கும் புதிய திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் 2 வயது முதல் 15 வயது வரையுள்ள 71 லட்சம் குழந்தைகளும், பள்ளி மாணவ- மாணவிகளும் பயன் பெறுவர்.
சத்துணவில் ஏற்கனவே வேக வைத்த கொண்டைக் கடலை, பச்சைப்பயறு மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது முட்டை சாப்பிடாத குழந்தைகள் பயன்பெறும் வகையில், இந்த ஆண்டின் கல்வி வளர்ச்சி நாளான இன்று முதல் சத்துணவில் முட்டை உட்கொள்ளாத குழந்தைகளுக்கும், மாணவ- மாணவிகளுக்கும் முட்டைக்கு மாற்று உணவாக வாழைப்பழம் வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இதன்படி, ஆண்டுக்கு ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில், சத்துணவுத் திட்டத்தில் முட்டை சாப்பிடாத 90,000 குழந்தைகள் மற்றும் மாணவ- மாணவியர்களுக்கு திங்கள், புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் வாழைப்பழம் வழங்கும் திட்டத்தை சென்னை, ஆயிரம் விளக்கு, மாதிரிப் பள்ளி சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளான “கல்வி வளர்ச்சி நாள்” விழாவில் முதலமைச்சர் கலைஞர் இன்று தொடங்கி வைத்தார்.