அரசு கேபிள் டி.வி. கட்டணம் அதிகம் இருக்காது: கருணாநிதி!

செவ்வாய், 15 ஜூலை 2008 (09:40 IST)
பொது மக்கள் ஏற்கெனவே செலுத்தி வந்த கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நிச்சயமாக வசூலிக்காது என்றும் கருணாநிதி உறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாஅவர் வெளியிட்ட அறிக்கை‌யி‌ல், கேபிள் டி.வி. கட்டணமாக மாதம் ரூ.150 முதல் ரூ.300 வரை வசூலிக்கப்படுகிறது. அந்தக் கட்டணம் ரூ. 100-க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று வரையறுத்து அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மற்ற நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் கேபிள் மூலம் தொலைக்காட்சி வழங்கும் முறைக்கும், சென்னையில் வழங்கும் முறைக்கும் முக்கிய வித்தியாசம் உண்டு.

சென்னையில் "கண்டிஷனல் ஆக்செஸ் சிஸ்டம்' என்ற முறை நடைமுறையில் இருப்பதால், இரண்டு வகையான இணைப்பு வழங்கும் முறை உள்ளது. ஒன்று, "செட்டாப் பாக்ஸ்' இல்லாமல் கேபிள் இணைப்பு மட்டுமே பெற்று குறிப்பிட்ட சில சேனல்கள் மட்டும் காண்பதாகும். இதுதான் சென்னையில் அதிக அளவு நடைமுறையில் உள்ளது. இதுபோன்ற இணைப்புகளை அரசு கேபிள் நிறுவனமும் வழங்கும். அதற்கான கட்டணம் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் அரசு கேபிள் கட்டணம் உள்ளது போல மாதத்துக்கு ரூ.100 மிகாமல் இருக்கும்.

இரண்டாவது முறையில், செட்டாப் பாக்ஸ் மூலமாக இணைப்புகள் பெறுவோர் தாங்கள் பார்க்க விரும்பும் சேனல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மத்திய அரசின் "டிராய்' விதிகளுக்கு உட்பட்டு, கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

எனினும், அரசு கேபிள் நிறுவனமும் செட்டாப் பாக்ஸ் மூலம் இணைப்பு வேண்டுவோருக்கு அந்த வகையிலே இணைப்பு வழங்கப்படும். அரசு கேபிள் டி.வி. இணைப்பு நிறுவனம் ஏற்கெனவே பொதுமக்கள் செலுத்தி வந்த கட்டணத்தை விட அதிகக் கட்டணம் நிச்சயமாக வசூலிக்காது.

கேபிள் ஆப்பரேட்டர்கள் நேரடியாக அரசு நிறுவனத்திடமிருந்து இணைப்பைப் பெற்று வீடுகளுக்கு வழங்கலாம். அல்லது மாவட்டத்துக்கு ஒருவர், இருவர் என்ற நிலையிலே இப்போது நிறுவனங்களை அமைத்துச் செயல்படுவர்கள் மூலமாகவும் இணைப்பைப் பெற்று மக்களுக்கு வழங்கலாம். எந்த முறையிலே வழங்கப்பட்டாலும் நிர்ணயிக்கப்பட்ட விகிதமான ரூ.100-க்கு மிகாமல் பொது மக்கள் இணைப்பைப் பெறுவார்கள் என்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்