கோவை மாவட்டத்தில் குப்பைகளைக் கொட்டி நாசப்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் ஐ.டி.சி. நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் வெளியிட்ட அறிக்கையில், கோவை மாவட்டம் தேக்கம்பட்டி அருகே பேப்பர் மற்றும் பேப்பர் கப் தயாரிக்கும் கம்பெனியை, 2004-ம் ஆண்டு ஐ.டி.சி. நிறுவனம் தொடங்கியது.
இந்த நிறுவனம் பயன்படாத தாள்களை இறக்குமதி செய்கிறோம் எனக் கூறி, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து குப்பைகளை இறக்குமதி செய்து வந்துள்ளது.
இதனை, 2005-ம் ஆண்டு தூத்துக்குடி துறைமுகத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதைத் தொடர்ந்தும், ஐ.டி.சி. நிறுவனம் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் இருந்து கழிவுகளை இறக்குமதி செய்து வருகிறது.
இந்த நிறுவனம் பவானி ஆற்றில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. எனவே, சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் ஐ.டி.சி. நிறுவனம் மீது மத்திய-மாநில அரசுகள் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் என்.வரதராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.