சென்னையில் ராஜபக்ச உருவ பொம்மை எரிப்பு!
திங்கள், 14 ஜூலை 2008 (15:54 IST)
தமிழக மீனவர்களின் மீது சிறிலங்கக் கடற்படையினர் நடத்திவரும் கண்மூடித்தனமான தாக்குதல்களைக் கண்டித்து, அந்நாட்டு அதிபர் ராஜபக்சவின் உருவ பொம்மையை எரித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.
பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தின்போது, உருவ பொம்மை எரிப்பைத் தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பான பாரி முனை சாலைகளில் பதற்றம் நிலவியது.
உருவ பொம்மை எரிவதைத் தடுக்க முயன்ற காவலர்களின் முயற்சியை வழக்கறிஞர்கள் முறியடித்தனர். காவலர்கள் கொண்டு வந்திருந்த தண்ணீர் வாளிகளைத் தட்டிவிட்ட வழக்கறிஞர்கள், உருவ பொம்மை முழுமையாக எரிந்த பிறகே அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தப் போராட்டத்தினால் என்.எஸ்.ஜி போஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேற்று முன்நாள் தமிழக மீனவர்களின் மீது சிறிலங்கப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 நாகை மீனவர்கள் பலியாகினர்.
இந்நிலையில், நேற்றும் தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் விதமாக வானை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சிறிலங்கக் கடற்படையினர், மீனவர்களின் வலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.