அரசு கேபிள் டி.வி.யை எ‌தி‌ர்‌த்தா‌ல் கடும் நடவடிக்கை: டி.ஜி.பி. எச்சரிக்கை!

ஞாயிறு, 13 ஜூலை 2008 (12:57 IST)
அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனின் செயல்பாட்டிற்கு எதிராக யாரேனும் செயல்பட்டா‌ல் அவ‌ர்க‌ளி‌ன் ‌மீது ச‌ட்ட‌ப்படி கடு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று தமிழக டி.ஜி.பி. கே.பி.ஜெயின் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர்.

கேபிள் டி.வி. ஒளிபரப்பு சாதனங்கள் மற்றும் இணைப்புகளுக்கு சேதம் விளைவிக்க யாரேனும் முயன்றாலோ அ‌ல்லது இது போன்ற செயல்களை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அனைத்து மாவட்ட காவ‌ல் அதிகாரிகளுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன எ‌ன்று‌‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

"பொதுமக்கள் கேபிள் டி.வி மூலமாக அன்றாட நிகழ்வுகளை பற்றி தெரிந்து கொள்ளவும், கல்வி மருத்துவம் மற்றும் விஞ்ஞானம் குறித்த அறிவுப்பூர்வமான தகவல்களை தெரிந்து கொள்ளவும், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கவும், மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் குறைந்த கட்டணத்தில் தரமான சேவையை வழங்கும் நோக்கத்துடன் அரசு கேபிள் டி.வி.கார்ப்பரேஷன் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கி பொதுமக்களுக்கு கேபிள் இணைப்பு வழங்க த‌மிழக அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது.

முதல்கட்டமாக கோவை, நெல்லை, திருவண்ணாமலை, தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டு இணைப்புகள் கொடுக்கப்பட உள்ளன." எ‌ன்று ஜெ‌யி‌ன் தனது அ‌றி‌க்கை‌யி‌ல் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்