பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைவு!

சனி, 12 ஜூலை 2008 (14:22 IST)
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் கீழே நோக்கி செல்கிறது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாரும் நீர் வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. இந்த அணையின் மொத்த நீர்பிடிப்பு உயரம் 120 அடி. இதில் 15 அடி சகதியாக உள்ளது. ஆகவே மொத்த நீர்பிடிப்பு உயரம் 105 அடியாகும்.

கடந்த ஆண்டு பவானிசாகர் அணை வரலாற்று சாதனையாக தொடர்ந்து ஐந்து மாதங்கள் அணை நிரம்பி உபரி தண்ணீர் பவானி ஆற்றின் வழியாக திறந்துவிடபட்டது. இந்த நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதையடுத்து நீலகிரி மற்றும் கூடலõர் மலைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்யாத காரணத்தால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் சகதியை கழித்து 95 .54 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1450 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது.

அணையில் இருந்து வினாடிக்கு பவானி ஆற்றில் வழியாக 1300 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டுள்ளது. அணையின் முழு கொள்ளவில் இருந்து தற்போது பத்து அடி குறைந்துள்ள நிலையில் அணைக்கு வரும் தண்ணீர் குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டமும் கீழ்நோக்கி செல்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்