அணுசக்தி ஒப்பந்த‌‌த்‌தி‌ல் அவச‌ரம் கூடாது : ஜெயலலிதா!

சனி, 12 ஜூலை 2008 (14:12 IST)
''பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கும் அணுச‌க்‌‌தி ஒப்பந்தம், இவ்வளவு அவசரமாக நிறைவேற்றப்படுவது அவசியமில்லை'' எ‌ன்று அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்க‌ை‌யி‌ல், ''கடந்த நான்கு ஆண்டுகளாக மன்மோகன்சிங் அரசு, அணுசக்தி ஒப்பந் தத்தை எப்படியும் நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் தன்னுடைய முழுக் கவனத்தையும் செலுத்தி வந்திருக்கிறது. இந்த ஒரே இலக்கை நோக்கியதாக மத்திய அரசு செயல்பட்டதற்கு, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவோம் என்று கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனையே காரணம்.

இடைக்கால அரசு போல உள்ள மன்மோகன்சிங் அரசு, இடைக்கால அரசாகவே செயல்படும் ஒரு அய‌‌ல்நாட்டு அரசுடன் செய்துகொள்வதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது? கடந்த பல ஆண்டுகளாக அணுசக்தி ஒப்பந்தம் பற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களுக்கு அதை ஏன் ஒத்தி வைக்கக் கூடாது? அமெரிக்காவிலும், இந்தியாவிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் புதிய பிரதிநிதிகள் ஆட்சிக்கு வருகின்ற நேரத்தில், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது பற்றி விவாதிக்கலாமே?

பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கும் இந்த ஒப்பந்தம், இவ்வளவு அவசரமாக நிறைவேற்றப்படுவது அவசியமில்லை. ‌பிரதம‌ர் மன்மோகன் சிங், தனது ஆட்சிக் காலத்தில் இதை நிறைவேற்றாவிட்டால், வானம் இடிந்து யார் தலையிலும் விழப்போவதில்லை.

இந்த ஒப்பந்தம் குறித்த அனைத்து அம்சங்களும் நாட்டின் எல்லா நிலைகளிலும் விவாதிக்கப்பட வேண்டும். ஒப்பந்தத்தின் முன்வரைவு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆறு மாதங்களுக்கேனும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். எல்லாத் தரப்பின ரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். இந்த கருத்துக்களும் அனைவருடைய பார்வைக்கும் வைக்கப்பட வேண்டும்.

பலதரப்பட்ட அறிவியல் அறிஞர்களின் கருத்துக்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், சமூக ஆர்வளர்களின் எண்ணங்கள் எல்லாம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட வேண்டும். ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றால் அவை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இவை அனைத்தும் பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும்.

இந்த நடவடிக்கைகளின் விளைவாக பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இந்த ஒப்பந்தத்திற்கு கிடைத்தால், அதன் பிறகே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வேண்டும். அப்போது தான் அது தேச நலன் கருதிய ஒப்பந்தமாக இருக்கும். அப்படி ஒரு ஒப்பந்தம் உருவாகின்ற போது அரசு அதை நடைமுறைப்படுத்தலாம். அதே நேரத்தில் தேசத்தின் ஒருமித்த கருத்து ஒப்பந்தத்திற்கு எதிராக இருந்தால், அதைத்தூக்கி குப்பைத் தொட்டியில் எறியவும் தயாராக இருக்க வேண்டும்'' எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்