ப‌ணி‌ந்து ‌விட மா‌ட்டோ‌ம்: ராமதா‌ஸ்!

வெள்ளி, 11 ஜூலை 2008 (10:38 IST)
''அரசின் குறைகளை தைரியமாக சுட்டிக் காட்டி விமர்சித்து வரும் பா.ம.க.வை அரசியல் ரீதியாக சந்திக்க வழியின்றி, அதை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. இதை கண்டு பணிந்துவிட மாட்டோம், மண்டியிடவும் மாட்டோம்'' பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது கு‌றி‌த்து அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''வன்னியர் சங்க மாநிலத் தலைவர் குரு, இந்திய தண்டனைச் சட்ட சாதாரணமான பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். இதுவே பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறப்படும் நிலையில், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது.

யாருடைய புகாரில் குரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று அறிவிக்கப்பட்டதோ அவர்களே நீதிமன்றத்தில் ஆஜராகி, குரு மீது புகார் எதுவும் கொடுக்கவில்லை என்றும், நாங்கள் கொடுத்ததாக காவ‌ல்துறை‌யின‌ர் தெரிவிக்கும் புகார்களைக்கூட விலக்கிக் கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குருவை விசாரணையின்றி சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்பதற்காக அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை அரசு ஏவி விட்டிருக்கிறது.

ஜனவரி மாதம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார் என்று குரு மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதற்காக அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்திருக்கிறது என்றால், பிப்ரவரியில் குளித்தலையில் பொதுக்கூட்டம் போட்டு இதைவிட வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருக்கும் அமைச்சர், கட்சிக்காரர்கள் மீது அந்த சட்டம் எப்போது பாயும்?

அரசின் குறைகளை தைரியமாக சுட்டிக் காட்டி விமர்சித்து வரும் பாமகவை அரசியல் ரீதியாக சந்திக்க வழியின்றி, அதை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. இதை கண்டு பணிந்துவிட மாட்டோம், மண்டியிடவும் மாட்டோம்.

இது தொடர்பாக, பா.ம.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்து முறையிடுவார்கள் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்