2008-09 நிதியாண்டில் நபார்டு திட்டத்தின் கீழ் 398 பேரூராட்சிகளில் ரூ.114 கோடியில் சாலைகள் சீரமைக்க அனுமதி வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரூராட்சிகள் துறை செயல்பாடுகள் குறித்து இன்று ஆய்வு செய்தார். அப்போது, அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2007-08 ஆம் ஆண்டில் முதற்கட்டமாக 140 பேரூராட்சிகளில் ரூ.74.05 கோடி மதிப்பீட்டில் 1,493 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 1,301 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
2008-09 நிதியாண்டில் ரூ.77.56 கோடி மதிப்பீட்டில் 1411 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. பிற துறை திட்டங்களை ஒருங் கிணைத்து, அதிக அளவிலான நிதி திரட்டவும், அதிக பணிகளை மேற் கொள்ளவும், எடுத்துக் கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் இந்த நிதியாண்டிலேயே முடிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
20 பேரூராட்சிகளில் ரூ.19.92 கோடியில் நவீன பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும், மேலும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையங்களில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் 40 சுகாதார வளாகங்கள் புதியதாக கட்டப்பட உள்ளது.
ரூ.646 லட்சம் மதிப்பீட்டில் 44 பேரூராட்சிகளில் புதிய அலுவலக கட்டடங்கள் கட்டவும், 200 பேரூராட்சிகளில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 2000 ஒளிரும் அடர் மின்விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த வீட்டு வசதி மற்றும் குடிசை பகுதி மேம்பாட்டு திட்டம் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கான அடிப்படை வசதி மேம்பாட்டு திட்டம் போன்ற திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, இத்திட்டங்களை மேலும் பல பேரூராட்சிகளில் ரூ. 132.61 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
2008-09 நிதியாண்டில் நபார்டு திட்டத்தின் கீழ் 398 பேரூராட்சிகளில் ரூ.114 கோடியில் சாலைகள் சீரமைக்க அனுமதி வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.