தமிழக‌த்‌தி‌ல் 8 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு: ஜெயலலிதா!

வியாழன், 10 ஜூலை 2008 (13:39 IST)
''தமிழக‌த்‌தி‌ல் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் 8 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டிருக்கிறது'' எ‌ன்று அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌‌ல், ''தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கோயம்புத்தூர், ஈரோடு, கன்னி யாகுமரி, வேலூர், திருவண்ணாமலை, சிவகங்கை, விருதுநகர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி உட்பட தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் 8 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேட்டூர் அணை திறந்து விடப்பட்டு ஒரு மாதம் ஆகியும் இன்னும் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இது போன்ற சூழ்நிலையில், மின்சார பம்ப் செட்டுகள் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயப் பணிகளை மேற் கொள்ளலாம் என்றால், முன் அறிவிப்பின்றி ஏற்படும் மின்சாரத் தடை காரணமாக, அதற்கும் வழியில்லாத நிலைக்கு தமிழக விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

ஆனால், தி.மு.க. முதலமைச்சர் கருணாநிதியோ, மின்சார உற்பத்தியைப் பெருக்குவதற்கான நடவடிக்கை‌யி‌ல் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. மின்சார வெட்டு காரணமாக, சில இடங்களில் குடிநீர் மேல் நிலைத் தொட்டிகளில் நீர் ஏற்ற முடியாமல் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

மின் வெட்டு காரணமாக, கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத் தறிகளை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, 40 விழுக்காடு உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பும், தினமும் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி இழப்பும் ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சியின் அலட்சியப் போக்கால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறு தொழில்கள் செய்வோருக்கும் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அமை‌ச்ச‌ர் ஆற்காடு வீராசாமியின் அலட்சியப் போக்காலும், அக்கறை இன்மையாலும், மின்சார உற்பத்தி குறைந்து அனைத்துத் துறைகளின் வளர்ச்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான மின்சார உற்பத்தியை பெருக்கவும், கா‌விரி நதிநீரை கர்நாடகத்திடமிருந்து உரிய காலத்தில் பெற்றிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜெயல‌லிதா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்