வே‌ண்டுமெ‌ன்றே பொன்முடி அவதூறு சுமத்துகிறார்: விஜயகாந்த்!

வியாழன், 10 ஜூலை 2008 (09:51 IST)
''நான் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல் அமைச்சர் பொன்முடி வேண்டுமென்றே என்மீது அவதூறு சுமத்துகிறார்'' என்று தே.மு.‌தி.க. தலைவ‌ர் விஜயகாந்த் கூறியு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அற‌ி‌க்கை‌யி‌ல், ''அரசு கல்லூரிகளும், அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகளும் அரசுப் பணத்தில் வளர்ந்துள்ளன. அவற்றை தனியார் பல்கலைக்கழகமாக மாற்றினால் அது அரசு சொத்தை தனியாருக்கு விற்பது ஆகாதா? அரசு நிறுவனங்களை தனியாருக்குத் தந்து ஒருமை பல்கலைக்கழகம் உருவாக்குவது தவறான முன்மாதிரியாகும்.

பல்கலைக்கழகங்களே கூடாது என்று சொல்லவில்லை. எத்தகைய முறையில் எப்படிப்பட்ட பல்கலைக்கழகங்கள் அமைய வேண்டும் என்பதில் தான் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது. நான் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதில் அளிக்காமல் என்னை தனிப்பட்ட முறையில் அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.

புது‌ச்சே‌ரியில் இருக்கும் மருத்துவக் கல்லூரிக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனது மனைவியின் அக்காள் நடத்தும் நிறுவனம் என்றும், ஆகவே சட்டப்படி பார்க்கும் போது அது, விஜயகாந்த்தின் குடும்பக் கல்லூரி என்றும் அமைச்சர் சொல்கிறார். குடும்ப சொத்துக்கும், உறவினர்கள் சொத்துக்கும் அமைச்சருக்கு வேறுபாடு தெரிய வேண்டாமா? எனது மனைவியின் அக்காள் சொத்து, எப்படி என் சொத்து ஆகும்?

இணைப் பேராசிரியராகப் பணியாற்றிய போது, சாதாரண நிலையில் இருந்த பொன்முடி, இன்று வியக்கத்தக்க அளவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளை அவரும், அவருடைய உறவினர்களும் பெற்றுள்ள மர்மம் என்ன?

"எனது மனைவி, பிள்ளைகள், மாமியார் பெயரில் அறக்கட்டளைகள் உள்ளன' என்று உயர்கல்வி அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். அவரது மனைவி பெயரில் ஏராளமான சொத்துகள் உள்ளன. அவை எப்படி வந்தது? நான் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அதை விட்டு விட்டு வேண்டும் என்றே என்மீது அவதூறு சுமத்துகிறார்.

இப்போது அவரே புதுச்சேரி மருத்துவ கல்லூரி என்னுடையது அல்ல என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆகவே மேற்கொண்டு என்ன விளக்கம் தருவதற்கு மேடை வேண்டும் என்கிறார். மேடையைக் கண்டு அஞ்சுபவன் அல்ல நான்'' என்று விஜயகாந்த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்