தி.மு.க. அரசுக்கு ஆதரவு வாபஸ்: ஆக‌ஸ்‌ட் 3ஆ‌ம் தே‌‌தி இறு‌தி முடிவு! தா.பா‌ண்டிய‌ன்

வியாழன், 10 ஜூலை 2008 (09:24 IST)
''தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து டெ‌ல்‌‌லி‌யி‌ல் ஆக‌ஸ்‌ட் 3 ஆ‌ம் தே‌தி நடைபெறு‌ம் தே‌சிய கவு‌ன்‌சி‌ல் கூ‌ட்ட‌த்‌தி‌ல் இறுதி முடிவு செய்து அறிவிக்கப்படும் '' என்று இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.

திருச்சியில் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், தமிழ்நாட்டில் மழலையர் பள்ளி முதல் பொ‌றி‌யிய‌ல் கல்லூரி கல்வி கட்டணம் முதல் பல்வேறு நடைமுறைகளில் ஒரு குழப்பத்தை அரசு ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து நானும், கூட்டணி கட்சி தலைவர்களும் முதலமைச்சரிடம் தெரிவித்தோம். ஆனால் கல்வித்துறையில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து பேசுவதற்காக டெல்லியில் மத்திய நிர்வாக குழு வருகிற 12, 13, தேதி ஆகிய 2 நாட்கள் கூடுகிறது.

மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது போல் இதில் தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கருத்து தெரிவித்து உள்ளனர். அந்த கருத்தை நானும், மாநில நிர்வாகிகளும் டெல்லியில் நடைபெறும் மத்திய நிர்வாக குழுவில் எடுத்து கூறுவோம்.

அடுத்த மாதம் 3, 4 ஆ‌கிய தேதிகளில் டெல்லியில் நடைபெறும் தேசிய கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து இறுதி முடிவு செய்து அறிவிக்கப்படும் எ‌ன்று தா.பா‌ண்டிய‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்