சென்னையில் இன்று முதலமைச்சர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள், இடதுசாரிகள் கட்சிகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தங்கள் ஆதரவை விலக்கி கொண்டதை பற்றி கேட்டதற்கு, இது பற்றி நேற்று மாலையே கூறிவிட்டேன். பத்திரிகைகளில் விரிவாக வந்து இருக்கிறது என்றார்.
டெல்லியில் நேற்று இருந்ததை விட இன்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? என்று கேட்டதற்கு, எந்த முன்னேற்றமும் இல்லை. அப்படியே இருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி பதில் அளித்தார்.
கூட்டணி அமைவதற்கு நீங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் சுர்ஜித்தும் முக்கிய காரணமாக இருந்தீர்கள். இப்போது அவர்கள் விலகி விட்டார்கள். இதனால் கூட்டணியின் வேகம் குறைந்து விட்டது. மேலும் குறைவதற்கான காரணம் இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, காரணம் ஏற்கனவே உள்ளதுதான். புதிதாக காரணம் கூறி குழப்பம் உருவாக்க வேண்டாம் என்று கருணாநிதி பதில் அளித்தார்.
மேலும் அவரிடம், தற்போது உள்ள சூழ்நிலையில் மதவாக சக்திகளை எதிர்ப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதே? என்று கேட்டதற்கு, இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை இது. இனி நிலைமை மேம்படும். சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம் என பதில் அளித்தார் முதல்வர் கருணாநிதி.