விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சர் கருணாநிதியை இன்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் டாக்டர் ஒய்.வி.ரெட்டி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
அப்போது, நாட்டின் பொருளாதார நிலை மற்றும் அண்மை நிகழ்வுகள் குறித்தும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் கருணாநிதி ரிசர்வ் வங்கியின் ஆளுநரிடம் விளக்கினார்.
விலைவாசி உயர்வால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியன குறித்து எடுத்துரைத்தார் முதலமைச்சர் கருணாநிதி.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மேலும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். இது குறித்த அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரெட்டி உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின்போது, தலைமைச் செயலர், நிதிச் செயலாளர் மற்றும் ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜோசப் ஆகியோர் உடனிருந்தனர்.