மத்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தீர அவகாசம் இருக்கிறது: கருணாநிதி!

புதன், 9 ஜூலை 2008 (10:47 IST)
மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெறப்போவதாக அறிவித்தாலும், இந்த பிரச்சினை தீருவதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது என்று முதலமைச்சர் கருணாநிதி கரு‌த்து தெரிவித்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் நே‌ற்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி செ‌ய்‌தியாள‌‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், அணுசக்தி ஒப்பந்தம் சரியா, அல்லவா என்பதை விட, அந்தப் பிரச்சினை பற்றிய விவாதத்தின் காரணமாக இந்தியாவில் அமைந்துள்ள அரசின் நிலைத்த தன்மைக்கு ஊனம் வந்து விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதில்தான் என் முழு கவனமும், சிந்தனையும் இருந்தது.

விபரீத விளைவுகளை பற்றி கவலைப்படக் கூடியவர்கள்தான் மத்திய அரசிலும், அதனை ஆதரிக்கும் இடதுசாரி அணியிலும் இருந்தவர்கள், இருப்பவர்கள்.

சுமுகநிலை உருவாவதற்கு தி.மு.க. சார்பில் நான் எடுத்த முயற்சிகள் இடையிடையே பலிப்பது போல் தோன்றினாலும், இறுதியாக வெற்றி பெறாமல் போனதற்காக மிகவும் வருந்துகிறேன். இயக்கங்களின் கவுரவத்தன்மையை விட இந்தியாவின் உறுதிப்பாடும் அதற்கான ஒற்றுமையும், காக்கப்பட இன்னும் அவகாசம் இருக்கிறது. இதுவே நான் விடுக்கும் வேண்டுகோள்.

ம‌த்‌தி‌யி‌ல் ஏற்பட்டு விட்ட நிலைமைக்காக வருத்தம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தனிப்பட்ட முறையிலோ அல்லது எந்தக் கட்சியின் மீதோ எனக்கு வருத்தமோ, கோபமோ, குறையோ கிடையாது.

அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிடவும் அவகாசம் உள்ளது. கைவிடாவிட்டாலும் பரவாயில்லை என்று கருதுவதற்கும் அவகாசம் உள்ளது

ராமேசுவரத்தில் வருந்தத்தக்க, கண்டிக்கத்தக்க நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி தமிழக அரசு அக்கறையோடு பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

மத்திய அரசுக்கும் தெரிவித்து வருகிறது. ஏதாவது ஒரு சுமுகமான முடிவு ஏற்பட்டாக வேண்டும். அது பிரதமர் மன்மோகன் சிங் கையில்தான் இருக்கிறது.

இந்தப் பிரச்னை பற்றி செய்தியாளர்களிடம் ஆழமாக விவாதிக்க முடியாது. சில விஷயங்களை நான் இங்கே வெளிப்படையாகச் சொல்ல விரும்பவில்லை என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்