தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தம் 6வது நாளாக நீடிக்கிறது.
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படை தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. சிறிலங்கா கடற்படை நடத்தி வரும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி கடந்த 3ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
800க்கும் அதிகமான விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மீன்பிடி மற்றும் அதை சார்ந்த உபதொழில்களில் ஈடுபட்டுள்ள 32,000 பேர் இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கிர்லோஷ்குமார் தலைமையில் நடந்த பேச்சு தோல்வியில் முடிந்தது. இதனால், மீனவர்கள் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
கடல்தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலர் சேது முருகானந்தம் கூறுகையில், ''இந்த விஷயத்தில் மத்திய அரசும், அயலுறவுத்துறையும்தான் தலையிட்டு பேசவேண்டுமே தவிர, மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்துவது வெறும் கண்துடைப்பே'' என்றார்.
மீன்பிடி தொழிலையே முழுவதுமாக சார்ந்துள்ள ராமேஸ்வரம், மீனவர்கள் வேலை நிறுத்தத்தால் கடைவீதிகள், வணிக நிறுவனங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.