பா.ம.க. மாநில மகளிர் அணி முன்னாள் செயலர் செல்வி வீட்டில் குண்டு வீசித் தாக்கிய வழக்கில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவை 2 நாள் விசாரணை காவலில் வைத்து விசாரிக்க அரியலூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பா.ம.க.வில் இருந்து அ.இ.அ.தி.மு.க.வில் சேர்ந்த குணசேகரன் என்பவரைத் தாக்கிய வழக்கில் காடுவெட்டி குருவை கடந்த 5ஆம் தேதி காவல்துறையினர் கைது பெரம்பலூர் குற்றவியல் நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், வெடிகுண்டு வீசிய வழக்கில் குருவிடம் விசாரணை நடத்த வேண்டும்; எனவே, அவரை 7 நாள்கள் விசாரணை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்று கோரி அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் காவல்துறையினர் நேற்று அவரை ஆஜர்படுத்தினர்.
அரசு வழக்கறிஞர் மற்றும் எதிர்த் தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை கேட்ட நீதிபதி விஜயராணி, குருவை 2 நாட்கள் விசாரணை காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். விசாரணையின் போது பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை வழக்கறிஞர்கள் குருவுடன் இருக்கலாம் என்று உத்தரவிட்டார்.
காவல்துறையினர் விசாரணைக்குப் பிறகு வருகிற 9ஆம் தேதி மாலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி விஜயராணி உத்தரவிட்டார்.