அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி ‌மீது வழ‌க்கு: விஜயகாந்த்!

திங்கள், 7 ஜூலை 2008 (15:42 IST)
''புதுவையில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி என்னுடையது என்பதை உயர் கல்வி அமைச்சர் பொன்முடி நிரூபிக்கவில்லையென்றால் அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்படும்'' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை‌யி‌ல், ''புதுவையில் ஒரு மருத்துவக் கல்லூரி எனக்கு சொந்தம் என்றும், அதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். அந்த மருத்துவக் கல்லூரி என்னுடையது என்பதை பொன்முடி நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர வேண்டி வரும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

அமைச்சர் என்ற காரணத்தினாலேயே அவர் பேசுவதெல்லாம் உண்மையாகாது. ஊழலுக்கு உறைவிடமே தி.மு.க.தான். அதற்கு இலக்கண, இலக்கியம் வகுத்ததுதான் தி.மு.க. வரலாறு. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால், மக்கள் ஆதரித்தால்தான் அந்தக் கட்சி ஆட்சிக்கு வர முடியும். இன்று தே.ு.ி.க வளர்கிறது என்றால், அதற்கு காரணம், ஊழலை ஒழிப்பதற்கு மக்கள் நம்பும் ஒரே கட்சி தே.ு.ி.க.தான்.

சமுதாயத்தில் உள்ள அடித்தள மக்களுக்கும் விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கும் கிடைக்கும் வகையில் உயர் கல்வி அமைய வேண்டும் என்று சாம் பிட்ரோடா கூறியிருக்கிறார். அதற்கு கல்வி அமைச்சரின் இன்றைய போக்கும் நேர்மாறாக இருக்கிறது. அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தனியார் பல்கலைக்கழகங்களாகவும், அரசு பல்கலைக்கழகங்களாகவும் கல்லூரிகள் மாறும்போது மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதே என் கேள்வி.

தனியார் பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு முறை எங்கேனும் அமல்படுத்தப்படுகிறதா? அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளைத் தனியார்மயமாக்கி வியாபார ரீதியில் கொண்டு செல்வதுதான் ஓர் அறிவுஜீவிக்கு இலக்கணமா? நான் எழுப்பிய கேள்விக்கு மக்கள் நலன் அடிப்படையில் நேரடியாக பதில் அளிக்காமல் எதையாவது சுற்றி வளைத்து திசை திருப்பும் முயற்சியில் அமைச்சர் ஈடுபடுகிறார்'' எ‌ன்று ‌விஜயகா‌ந்‌‌த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்