இடம் பரிமாற்றத்தை நிரூபித்தால் பதவி விலக தயார்: விஜயகாந்துக்கு அமைச்சர் பொன்முடி சவால்!
ஞாயிறு, 6 ஜூலை 2008 (11:59 IST)
65 மருத்துவர் இடங்களும், 940 பொறியியல் இடங்களும் தனியாருக்கு பரிமாறியுள்ளதை விஜயகாந்த் நிரூபித்தால் பதவி விலகத் தயார்'' என்று உயர் கல்வி அமைச்சர் பொன்முடி சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 2007-08-ல் புதுச்சேரி அரசு விஜயகாந்தின் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரிக்கு கட்டணமாக ரூ.2 லட்சத்து 3 ஆயிரம் நிர்ணயித்தது. ஆனால், மாணவர்களிடம் ரூ. 3 லட்சத்து 8 ஆயிரம் வசூல் செய்தாரே அது ஏன்?
அது தெரிந்த புதுச்சேரி அரசு அதிகமாக வசூலித்த தொகையைத் திருப்பித்தர உத்தரவிட்டது. எத்தனை பேருக்கு அவர் திருப்பிக் கொடுத்திருக்கிறார்?
இதற்கெல்லாம் புதுச்சேரி அரசிடம் கொடுக்கப்பட்ட புகார் மனுக்களை வேண்டுமானால் விஜயகாந்துக்கு அனுப்பி வைக்கட்டுமா? இதையெல்லாம் மறைத்துவிட்டு அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மாநில அரசே ஒருமை பல்கலைக்கழகங்களை உருவாக்க முயற்சிக்கவில்லை என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், குஜராத்தில் நிர்மா பல்கலைக்கழகம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தனியார் பல்கலைக்கழங்கள் மாநில சட்டப் பேரவையால் உருவாக்கப்பட்டுள்ளன.
இரு தனியார் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களாக மாறுவதன் விளைவாக, அரசிடம் இருந்து 65 மருத்துவர் இடங்களும், 940 பொறியியல் இடங்களும் தனியாருக்கு பரிமாற்றம் நடைபெற்றுள்ளது என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
சட்டமே நிறைவேற்றப்படாத நிலையில் இந்த ஆண்டே சீட்டுகள் பரிமாறியுள்ளதை விஜயகாந்த் நிரூபித்தால் நான் பதவி விலகத் தயார்'' என்று அமைச்சர் பொன்முடி சவால் விடுத்துள்ளார்.